விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.

அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளார்.

“இந்த நல்ல விஷயம் ‘டார்லிங் 2’ படத்தால் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதற்கு முன்பும் இது நடக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பெயரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தான் காரணம்.

‘டார்லிங் 2’ விரைவில் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டிற்குக் காத்திருக்கும் போதே ‘உல்ட்டா’ படத்தின் கதை என்னைக் கவர்ந்து விட்டது. இயக்குனர் ஏஆர் முருகதாசின் அசோசியேட் இயக்குனரான விஜய் பாலாஜி, எழுத்தாளர் பாலகிருஷ்ணனுடன் இந்தப் படத்தில் இணைந்து இந்த வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இந்தக் கதைக்கு உல்ட்டா என்பது பொருத்தமான ஒரு தலைப்பாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. அது மிகவும் நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டுள்ளது. ‘சைக்காலஜிக்கல் காமெடியாக ஒரு புதிய வகைப் படமாக இந்தப் படம் அமையும். ரசிகர்கள் முழுவதுமாக இந்தப் படத்தை ரசிக்கும் விதத்தில் படம் இருக்கும். ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அவருடைய நடிப்புத் திறமையை ரசிகர்களுக்கு உணர்த்தும். ரிட்ஸ் மீடியாக ஒர்க்ஸ் நிறுவனம் இந்த ‘உல்ட்டா’ படம் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைக்கிறது. இம்மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் ரமீஸ் ராஜா.