குற்றப் பரம்பரை படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் பாரதிராஜா இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. பாரதிராஜா – இளையராஜா இணையில் கடைசியாக வந்த படம் நாடோடித் தென்றல். அதன் பிறகு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார் பாரதிராஜா.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு இருவரும் குற்றப் பரம்பரை படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாரதிராஜாவே இதனை அறிவிக்கவும் செய்தார். ஆனால் இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்ததேயொழிய குறையவில்லை. குறிப்பாக மதுரையில் நடந்த அன்னக்கொடி படத்தின் இசை வெளியீட்டில் பாரதிராஜாவின் பேச்சு இளையராஜாவை அவமதிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குற்றப் பரம்பரை படத்தைத் தொடங்கியுள்ளார் பாரதிராஜா.

இந்தப் படத்துக்கு இசை யார் என்பதை பாரதிராஜா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்தப் படத்துக்கு இசையமைப்பது குறித்து இளையராஜாவுடன் பேச்சு நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இப்படத்தின் பூஜை உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா பேசுகையில், “கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ம் ஆண்டு இறந்த மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் படுகொலையை ‘குற்றப் பரம்பரை’ படம் மூலமாக சொல்ல வருகிறேன்.

இது குற்றப் பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை. நான் பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்தப் படத்தை எடுக்கவே என்னைக் கடவுள் நியமித்துள்ளார். ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன்,” என்றார். பாலா எடுக்கவுள்ள குற்றப் பரம்பரை குறித்தோ, இந்தப் படம் தொடர்பான வேறு சர்ச்சைகள் குறித்தோ அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இசையமைப்பாளர் குறித்துக் கேட்டபோது, “நானே விரைவில் அறிவிக்கிறேன்,” என்றார்.