நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள்.

மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

அந்தவகையில் அஜித்துக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்களாம். ஆனால் அஜித், நடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்களிடமே வசூலித்தால் போதும் என கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இதைதொடர்ந்து இவர் இதில் கலந்துகொள்ள மாட்டார் எனவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் விசாரித்தபோது, ” அஜித் இந்த போட்டியை புறக்கணிக்கிறாரா அல்லது அவர் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவித்தாரா என்பதையெல்லாம் நீங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும். மேலும் இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் நாம் தலையிட முடியாது” என்றார்.

Loading...