தீபாவளிக்கு சரியாக இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இன்றைய நிலவரப்படி 2 தமிழ்ப் படங்களின் வெளியீடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரு படங்களைத் தவிர, இந்தியில் ஷாரூக்கான் நடித்துள்ள மெகா படமான ஹேப்பி நியூ இயர் வெளியாகவிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் தமிழ்ப் படங்கள் எவை என்று புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. பூஜையும் கத்தியும்தான் அவை. இவற்றில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் விவரங்களெல்லாம் ஒன்இந்தியா ரசிகர்களுக்கு அத்துப்படி ஆகியிருக்கும். எனவே ரிலீசாகும் தியேட்டர்கள் பற்றிப் பார்க்கலாம்.

poojai059-600

பூஜை

படம் தொடங்கிய நாளன்றே, தீபாவளி வெளியீடு என விளம்பரம் செய்த மகா தன்னம்பிக்கை ஹீரோ விஷாலின் மூன்றாவது சொந்தப் படம் இது. மொத்தம் 350 அரங்குகளில் வெளியாகிறது. இன்னும் இருபத்தைந்து அரங்குகளை கூடுதலாக குறிவைத்திருக்கிறார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் கிட்டத்தட்ட 500 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். ஆந்திராவில் கணிசமான எண்ணிக்கையில் அரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

kaththi-movie--6909

கத்தி

கடும் எதிர்ப்பார்ப்பு, எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கிடையில் வெளியாகிறது விஜய்யின் கத்தி. இந்தப் படமும் தீபாவளி ரிலீஸ் முடிவிலிருந்து கடைசி வரை பின்ன வாங்கவில்லை. தமிழகத்தில் 400 அரங்குகள், வெளியில் 600 அரங்குகள் என்பது தயாரிப்பாளரின் திட்டம்.

வெளிநாடுகளில் 600 அரங்குகள் பிடிப்பது லைகா மற்றும் அய்ங்கரனுக்கு பெரிய விஷயமே இல்லை. அவ்வளவு திரையரங்குகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்தப் படத்தை வெளியிடும் அரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பும், மாணவர் அமைப்புகளும் அறிவித்துள்ளன. அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

happy-newyear-6000

ஹேப்பி நியூ இயர்

ஷாரூக்கானின் மெகா தீபாவளி ரிலீஸ் ஹேப்பி நியூ இயர். கிட்டத்தட்ட ஒரு நேரடி தமிழ்ப் படம் போலவே 100-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். இந்தியில் மட்டுமல்லாது, தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஷாரூக்கானுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளதை அவரது சென்னை எக்ஸ்பிரஸ் நிரூபித்தது. தென்னகத்தில் ஹேப்பி நியூ இயரும் பெரிதாக வசூலில் கலக்கும் என்று தெரிகிறது.

boologam-600

பூலோகம்…?

ஜெயம் ரவி – த்ரிஷா நடித்த பூலோகம் படம் கடைசி நேரத்தில் வெளியாகும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. தியேட்டர் பிடிப்பதில் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் மும்முரம் காட்டினார். ஆனால் இப்போது அமைதியாக இருக்கிறது ஆஸ்கார் வட்டாரம்! அடுத்த ஒரு வாரத்துக்குள் பெரிய மாற்றமிருக்காது என்பதால்… இதுதான் தீபாவளி ரிலீஸ் நிலவரம்!