தமிழ் ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த விடுதலைப்புலிகள் இயக்கப் போராளி திலீபன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்த படத்தை ஆனந்த மூர்த்தி என்பவர் இயக்குகிறார். கதிர், அமீர், பாலாவிடம் பணியாற்றியவர் இந்த அனந்த மூர்த்தி. இந்தப் படத்தில் திலீபன் கேரக்டரில் நந்தா நடிக்கிறார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வேடத்தில் ஸ்ரீதர் நடிக்கிறார். கிட்டு கேரக்டரில் வினோத் சாகரும் மில்லர் கேரக்டரில் பரத்தும், மாத்தையாவாக முனுசாமியும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மாவீரன்

படம் குறித்து இயக்குநர் ஆனந்த மூர்த்தி கூறுகையில், “இந்திய அமைதிப் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வீர வாழ்க்கை மகத்தானது. அந்த மாவீரனின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுக்கிறேன்.

பிரபாகரனின் தம்பி

ஈழத்துக்கு சென்று திலீபன் வாழ்ந்த வீடு அவருடன் பழகியவர்கள் மற்றும் உறவினர்கள் என தேடித் தேடி பார்த்து, பேசி இந்த படத்தை எடுக்கிறேன். திலீபனை பிரபாகரன் சொந்த தம்பியாகவே கருதினார்.

இந்திய ராணுவத்திடம்..

இந்திய ராணுவம், புலிகளுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுத்தபோது, அதில் பயிற்சி பெற்றவர் திலீபன். அவருக்கும் கிட்டுவுக்கும் மிகவும் அடர்த்தியான நட்பு உண்டு. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள கிட்டு, திலீபனை ஏராளமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழம் இயல்பாகவே படத்தில் பதிவாகி இருக்கு…

கண்ணீர் விட்ட பிரபாகரன்

உண்ணாவிரதம் இருக்க திலீபன் அனுமதி கேட்டபோது கூட அவர் மறுத்தார். ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதார். பிரபாகரன் அழுதது அந்த ஒருநாள் மட்டும்தான்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இதையெல்லாம் படத்தில் கொண்டு வருகிறேன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

சமரசமில்லாமல்...

சினிமாவுக்காக எந்த சமரசமும் இல்லாமல் நடந்ததை, அந்த உண்மைகளை அப்படியே படம் பிடித்திருக்கிறேன்,” என்றார்.

தப்புமா?

இயக்குநர் சொல்வதைப் பார்த்தால், இந்திய ராணுவத்துக்கு எதிரான பல விஷயங்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பது போலத் தெரிகிறது. இதனை இந்திய தணிக்கைக் குழு அனுமதிக்குமா?

அப்படி ஒரு பிரச்சினை வராது என நம்புகிறார் இயக்குநர். பார்க்கலாம்!