கத்தி படத்தின் பிரச்சனையில் ஆதரவு அளித்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கு தயாரிப்பாளரால் தான் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சனை ஒருவழியாக தீர்ந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து விஜய்யின் சார்பில் அவரது பி.ஆர்.ஓ. பி.டி. செல்வக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்! சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது.

எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் கத்தி திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டுக் கொள்கிறேன்.

கத்தி திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிிவத்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.