சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் நேற்று தொடங்கியது.

கத்தி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படம் நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கியது.

இதற்கென இங்கு பிரமாண்ட ஒரு செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செட்டில்தான் பாடல் காட்சி படப்பிடிப்புடன் படம் தொடங்கியது.

இந்தப் பாடல் காட்சியில் 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் விஜய்யுடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடிக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் எனும் நட்டி கவனிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை விஜய்யின் மேலாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.