ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. லிங்கா படம் ரஜனியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

தமிழகம் தவிர பிற பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் தமிழகத்தில் நேற்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டது (அபிராமி போன்ற அரங்குகளில் டிக்கெட் விற்பனை திங்களன்றே தொடங்கிவிட்டது). ரசிகர்கள் பெரும் வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.

படம் வெளியாகும் வெள்ளியன்று அதிகாலை 1 மணி, 4.30 மணி, 8 மணி, 11.30 மணி, 2.30 மணி, 6.30 மணி மற்றும் இரவு 10 மணி என மொத்தம் ஏழு காட்சிகளை பல அரங்குகள் நடத்துகின்றன.

மாயாஜாலில் உள்ள 16 திரைகளிலும் பத்து நிமிட இடைவெளியில் ஒரு காட்சி என 100 காட்சிகளுக்கும் அதிகமாக லிங்கா திரையிடப்படுகிறது. மாயாஜால், தேவி போன்ற மால்களில் இன்றுதான் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்பதால், முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த அரங்குகளுக்காக காத்திருக்கின்றனர்.