ரஜினி படம் வெளியாகும் டிசம்பர் 12-ம் தேதியன்று விடுமுறை எடுத்து படம் பார்ப்பது, ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவது ட்ரெண்டாகிவிட்டது.

உலகெங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் விடுமுறைக் கடிதம் கொடுத்துவிட்டு, படம் பார்க்க தயாராகி வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் ரஜினி மருமகன் தனுஷும் இணைந்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் லிங்கா படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது முதல் 10 நாட்களுக்கான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. இத்தனைக்கும் இது தேர்வுக் காலமாகும்.

‘லிங்கா’ படம் உலகமெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ், ‘லிங்கா’ படத்தை கொண்டாட தான் நடிக்கும் படத்தின் இயக்குரான பாலாஜி மோகனுக்கு லீவ் லெட்டர் கொடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். அதில், ‘லிங்கா படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இன்று முன்பதிவு தொடங்கிவிட்டது. நான் பாலாஜி மோகனிடம் லீவ் லெட்டர் கொடுத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷ், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ என்ற படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு, ‘தாராளமாக லீவ் தருகிறேன். எனக்கு லிங்கா முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளைக் கொடுங்கள்,” என்று பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.