நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் என்பதையும் தாண்டி பல விஷயங்கள் இந்த 36 வயதினிலே படத்தில் உள்ளது. ஜோதிகா தமிழ் சினிமாவில் யாருமே நிரப்ப முடியாத ஒரு இடத்தில் இருந்த போது, திருமணமாகி குடும்ப வாழ்வில் இணைந்தார்.

ஆனால், ஜோதிகாவை தமிழ்நாடு மக்கள் எப்போது மீண்டும் திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். அவர்களுக்காகவே மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற How old are you? படத்தின் ரீமேக் உரிமையை சூர்யா வாங்கி ஜோதிகாவை நடிக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ‘நம் திருமணத்திற்கு பிறகு பெயருடன் கணவர் பெயரும் இணைந்து விடுகின்றது, பிறகு நம் வாழ் நாள் முழுவதும் அவர்களுக்காகவே தான் இருக்கின்றோம், அதில் எந்த தவறு இல்லை, நம் குழந்தைகளை கவனித்து அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

ஆனால், நம்மை 20 வருடங்களாக வளர்த்த நம் தாய், தந்தை பெயருக்கு என்ன செய்தோம் என்பதே இப்படத்தின் மைய கரு’ என்று கூறியிருந்தார். அவர் சொல்வதை கொஞ்சம் உற்று நோக்கினால் புரியும். இத்தனை நாட்கள் திருமணமான பெண்கள் அனைவரும் குடும்பம், குழந்தைகள் என இருந்து தங்கள் பெற்றோரை மறந்து சராசரி பெண்களை போல், ஏதோ சாதனை என்ற வார்த்தையே அவர்களுடையே அகராதியில் இல்லாதது போல் தான் வாழ்கின்றார்கள்.

அவர்களுக்கான படம் தான் இந்த 36 வயதினிலே, திருமணம் ஆன ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது, அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகாமல் இருக்கும் இளம் பெண்கள் கூட, பின்னாளில் யோசிப்பதற்கு பதிலாக தற்போதே நாம் செய்ய வேண்டிய சாதனைகள் நிறையவுள்ளது என கண்டிப்பாக இந்த படம் நினைக்க தூண்டும். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த 36 வயதினிலே படத்தை பார்க்க தவறாதீர்கள். உங்கள் வாழ்விலும் ஒரு மாற்றம் ஏற்படலாம்.